மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மேங்கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் (சைக்கோ) பாதிக்கப்பட்டவர் என அவரது முன்னாள் வகுப்பு தோழர்களும், ஜூனியர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாலியல் வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு மோசமான நடத்தை உடையவர்.
அதனால்தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியின் திரிணமூல் பிரிவில் இருந்து மிஸ்ரா வெளியேற்றப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்களைப் பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று பலமுறை தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களிடையே பரப்பும் அளவுக்கு மனநோய் உடையவர் மிஸ்ரா. மேலும், பெண்களை உடல்ரீதியாகவும் அவமானப்படுத்துவார்.
பாலியல் வன்கொடுமை, தாக்குதல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் உடல் ரீதியில் துன்புறுத்தல் செய்வதாக மிஸ்ரா மீது ஏராளமான புகார்கள் மாணவிகளின் சார்பில் தரப்பட்டும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கல்லூரி வளாகத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து போவதுடன், கல்லூரி வாட்ஸ்அப் குழு, தகவல் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு மிஸ்ராவின் செல்வாக்கு இருந்தது.
மிஸ்ராவும் அவரது நண்பர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது நன்கு தெரிந்திருந்தும் அவர்களை பாதுகாக்கும் வேலையில்தான் கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு முன்னாள் மற்றும் ஜூனியர் மாணவர்கள் தெரிவித்தனர்.