No results found

    ஜோதிடம் பொய்யா? ஜோதிடர்கள் பொய்யா?


    ஜோதிடம் உண்மையா? அல்லது சும்மா அடிச்சுவிடுற கதையா? இது பலருக்கும் இருக்கும் சந்தேகம்! இன்னும் சொல்லப்போனால் ஜோதிடத்தை நம்புபவர்கள் கூட தனக்கு எதிர்பார்த்த எதுவும் நடக்காமல் போகும் போது., விரக்தியின் விளிம்பில் அவர்கள் சொல்லுவது..... “ஜோதிடம் பொய்” என்பதுதான். அப்படியானால் தவறு எங்கே இருக்கிறது? ஜோதிடத்திலா? ஜோதிட பலன் சொல்பவர்களிடத்திலா? 

    நிச்சயமாக பலன் சொல்லுபவர்களிடம் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். இதை ஓர் பலன் சொல்லும் ஜோதிடர் என்கிற முறையிலேயே சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமோ குழப்பமோ இல்லை. 

    ஜோதிடம் என்றும் பொய்ப்பதில்லை, உரைப்பவர்களிடம்தான் தவறு உண்டாகிறது, அதற்காக ஜோதிடமே பொய் என்பது எவ்வளவு பெரிய அபத்தம்!? 

    இந்தப் பதிவில் சில பொது கருத்துக்களை பதிவிடுகிறேன். அதை உங்கள் சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக 99% சரியாகத்தான் வரும். 

    இங்கு கிரகங்களின் சேர்க்கைப்பற்றியும் அதன் பலன்கள் என்னவென்றும் சொல்கிறேன். 

    இங்கு கிரக சேர்க்கை என்பது இரண்டு கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருப்பதாக மட்டும் கணக்கிடக்கூடாது.  1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும்.

    முதல் கருத்தில் விளக்கமாகச் சொல்கிறேன்.  மற்ற கருத்துக்களும் இதே முறையில் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

    இந்த கணக்கீடுகள் எந்த லக்னம் அல்லது எந்த ராசி என்பது பார்க்கப்பட வேண்டியதில்லை. கிரக சேர்க்கை மட்டுமே கவனிக்கவேண்டும். 

    சூரியன் சந்திரன் ஒன்றாக இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 9ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் இது சூரியன் சந்திரன் ஒன்றாக இருப்பதாகத்தான் கருதப்படவேண்டும். இதேபோல், மற்ற கிரகங்கள் விளக்கத்தையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

    சூரியன் சந்திரன் இணைந்திருக்க - உயர்பதவியில் இருப்பார்கள். ஆனால் அர்த்தமற்ற பயம் உண்டாகும். சின்னச்சின்ன பொய்கள் பேசுபவராக இருப்பார்கள். மூளை மற்றும் இதய நோய் குறித்த பயம் உடையவராக இருப்பார்கள். அவசர முடிவுகளை எடுத்துவிட்டு ’என்ன நடக்குதுன்னு தெரியலயே’ என்கிற மன நிலைக்கு ஆளாவார்கள். 

    சூரியன் செவ்வாய் இணைந்தால்  -  (1,5,9) மூர்க்கத்தனம், உச்சபட்சமான கோபம், எளிதில் கை நீட்டி அடிக்கும் சுபாவம், அதிக கார உணவுகளில் விருப்பம், அதீத சுறுசுறுப்பு, எடுத்த காரியத்தை முடிக்கும் வரை வேறு எதைப்பற்றியும் யோசிக்காத குணம், சிறு வயதிலேயே ரத்த அழுத்த பாதிப்பு, விளையாட்டுகளில் சாதனை, வீரதீர விளையாட்டுகளில் ஆர்வம், உறுதியான உடல்வாகு, உடற்பயிற்சி ஆர்வம் என்றெல்லாம் இருக்கும்.

    சூரியன் சுக்கிரன் இணைந்தால் - ஆடம்பர வாழ்வு வாழ ஆசைப்பட்டாலும் அதில் ஈடுபாடுகாட்ட முடியாது. நேர்த்தியான வீடு அமையும். வீடும் கலையம்சத்தோடு இருக்கும்.  மனைவியின் எண்ண ஓட்டத்தை அறியமுடியாமல் பிரச்சினைகளும் சங்கடங்களும் இருக்கும். கலைத்துறையில் இயக்குனராகும் ஆர்வம் இருக்கும். நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையால் மனைவி முதல் உறவுகள் நட்புக்கள் வரை விரிசல் உண்டாக்கும்.  

    சூரியன் புதன் இணைந்தால் - கல்வியில் முன்னேற்றம், கல்வியால் முன்னேற்றம், வங்கிப்பணி, ஆசிரியர் பணி, நிர்வாகப் பணி, வியாபாரத்தில் தனியிடம், கமிஷன் தொழிலில் உச்சம் அடைவது, பலசரக்குக்கடை வியாபாரம் என ஜொலிப்பார்கள்.  

    சூரியன் சனி இணைந்தால் - அரசு உத்தியோகம் நிச்சயம். அல்லது தனியார் நிறுவனமாக இருந்தால் உயர் பதவி உறுதி. அரசியல் ஆர்வம், அரசியலில் வெற்றி, அரசியல் மூலமாக பதவி, அல்லது அரசு கான்ட்டிராக்ட் எடுத்துச் செய்தல், வழக்கறிஞர், நீதிபதி, உத்தியோகத்தில் வேகமான பதவி உயர்வு போன்றவை தரும். ஆனால் தந்தை மகன் உறவு சரியாக இருக்காது அல்லது பகை உண்டு பண்ணும். 

    சூரியன் ராகு இணைந்தால் - உச்சபட்சமான உயர்பதவி உண்டு. ஆனால் பதவி பறிப்பு ஏன் என்றே தெரியாமல் திடீரென வரும். அசாத்தியமான துணிச்சல், மன தைரியம், திட்டங்களை வகுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் வல்லுநர், இதயம் மற்றும் முதுகுத் தண்டுவடம் முதலான பிரச்சினை உண்டு பண்ணும். இளம் வயதிலேயே தந்தையை இழந்திருப்பார். 

    புதன் செவ்வாய் இணைந்தால் - கல்வியில் தடை, கல்விக்காக இடமாற்றம், விரும்பிய கல்வி படிக்க முடியாத நிலை, அதேசமயம் ஆராய்ச்சிக் கல்வி சிறப்பாக இருக்கும்.  தோல் மற்றும் நரம்பு நோய் என தாக்கலாம்.  

    குரு சனி இணைந்தால் - படிக்கும்போதோ, படித்து முடித்த உடனேயோ வேலை கிடைக்கும்.  வேலையின்மை என்பதே இருக்காது.  சொந்தத் தொழிலும் கை கொடுக்கும். 

    சனி சுக்கிரன் இணைந்தால் - வாழ்நாளில் பணத்தட்டுப்பாடு என்பதே இருக்காது. ஏதாவதொரு வகையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். 

    சனி கேது இணைந்தால் - பெற்றோரை விட்டு பிரிந்து இருந்திருக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகியிருக்கும்.  அது படிப்பிற்காகவோ, வேலை நிமித்தமாகவோ இருக்கலாம்.  ஒருசிலருக்கு பாட்டி வீட்டில் தங்கி படிக்கவும் நேர்ந்திருக்கும், அல்லது சிறு வயதில் ஒரு முறையாவது தொலைந்து போய் இருப்பார்கள். 

     இளநரை, அதிக முடி உதிர்தல் உடையவர்கள், ஆன்மிக ஈடுபாடு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகரிக்கும். குருவாக ஒருவர் இருப்பார்.  அது சித்தராகவும் இருக்கலாம், மகான்களாகவும் இருக்கலாம். 

    குரு ராகு இணைந்தால்  -  இறை மறுப்பு, மூத்தோரை மதிக்காத செயல், ஜோதிடத்தை இகழ்தல், எல்லாம் எனக்குத்தெரியும் என்ற அகம்பாவம் உடையவர்கள், தன் தேவைக்காக எதற்கும் துணிபவர்கள் என்று இருப்பார்கள். 

    குரு புதன் இணைந்தால் - அபார ஞானம், நல்லது கெட்டதை உடனே உணர்பவர்கள், அதிகபட்சம் வங்கிப்பணியில் இருப்பவர்கள், வழுக்கைத்தலை, தொப்பை உடையவர்கள், உடல் உழைப்பை விரும்பாதவர்கள், மூளைக்கு வேலை தருபவர்கள் என இருப்பார்கள். 

    இப்படி பலவிதமாக பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் இன்னும் மற்ற கிரகங்கள் இணைவது, பார்வை, கிரக வரிசை என பார்த்து பலன் சொல்ல... இன்னும் சிறப்பாக பலன்களை விவரிக்க முடியும். 

    ஜோதிடத்தை கற்பதும் எளிது, உணர்வதும் எளிது, பலனை வெளிப்படுத்துவதும், அப்படி உரைக்கப்படும் பலன் பலிதமாவதும் ஜோதிடரின் வாக்கு ஸ்தானம் பலமாக இருந்தால்தான் நடக்கும்.  

    இந்த ஜோதிடம் அறிவோம் -2 பகுதியில் நிறைய தோஷங்கள், அதன் பரிகாரங்கள், யோகங்கள் அதன் பலன்கள் என விரிவாகப்  பார்த்தோம். நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 

    இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிற.து.   

    இதுவரை ஆதரவு தந்த வாசகர்களான உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். எனது ஜோதிட ஆசிரியரும் குருநாதருமான தேனி யோகராம்சங்கர் அவர்களை வணங்கி இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன், மீண்டும் சந்திப்போம்! 

    Previous Next

    نموذج الاتصال