இப்போது நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம்... விசாகம். இந்த நட்சத்திரத்திற்கு அதிபதி குரு பகவான். இது நட்சத்திர வரிசையில் 16வது நட்சத்திரம். இந்த விசாக நட்சத்திரம், தன் முதல் மூன்று பாதங்களை துலாம் ராசியிலும், கடைசி பாதமான நான்காவது பாதத்தை விருச்சிக ராசியிலும் கொண்டிருக்கிறது.
விசாக நட்சத்திரத்தில்தான் முருகப்பெருமான் அவதரித்தார் என்கிறது புராணம். ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகனின் நட்சத்திரம் விசாகம் என்பது, திருச்செந்தூர் திருத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் திருச்செந்தூர் முருகனை வருடம் ஒருமுறையாவது தரிசனம் செய்யவேண்டும். திருச்செந்தூர் ஸ்தலம்தான், சூரனை போரில் வென்ற இடம். விசாகம் போர்க்களம் என்பதால் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த ஆலயம் இது!
ஆமாம்... விசாகத்தின் மிக முக்கியமான, விசேஷமான, அற்புதமான தன்மை... விசாகம் ஒரு போர்க்கள நட்சத்திரம்.
போர்க்களமா என்று திகைக்க வேண்டாம்! போர் என்றால் என்ன? வெற்றியை யார் வசப்படுத்துவது என்பதுதானே! அப்படி போரில் வெற்றி பெறவேண்டும் என்றால் வியூகம் சரியாக இருக்க வேண்டும். வியூகம் சரியாக இருந்துவிட்டால் வெற்றிக்கனி நம் வசமாகும். இப்படி போர்க்களமும் அதன் வியூகமும் கொண்டதுதான் விசாகம் நட்சத்திரத்திரத்தின் விசேஷம்.
சரியான திட்டமிடல் இல்லை என்றால் வீழ்ச்சி அடைவது உறுதி. அபிமன்யூ, சக்கர வியூகத்தில் நுழையத் தெரிந்தவன். ஆனால் வெளிவரும் கலையை அறிந்திராதவன். சரியான திட்டமிடல் இல்லாததால் தன்னுயிர் துறந்தான்.
அட, விசாகத்தின் வடிவமும் சக்கரம் தான்.
ஆனால் இந்த சக்கரம் வண்டியின் சக்கரம் அல்ல. குயவர்கள் சுற்றுவார்களே அந்தச் சக்கரம். வண்டிச் சக்கரம் போல இருந்தால் ஏற்றம் இறக்கம் மாறிமாறி வரும். இந்த விசாக சக்கரம் ஒரு வட்டமாக சுழல்வதால், எதையும் திட்டமிட்டு ஒருவட்டத்துக்குள் அடக்கி வெற்றி காண்பார்கள்.
விசாகம், வானில் பார்ப்பதற்கு முறம் போன்றும், லாடம் போன்றும், தோரண வாயில் போன்றும் காட்சி அளிக்கும். இந்த அமைப்பே இதன் தன்மையை நமக்கு தெளிவுற வெளிப்படுத்துகிறதுதானே.
அரிசியோ பருப்போ புடைத்து தூசி நீக்கி சுத்தப்படுத்துதல் போல, தன்னிடம் இருக்கும் குறைகளை அடுத்தவர் சுட்டிக்காட்டும் முன்பே சரிசெய்பவர்கள் விசாக நட்சத்திரக்காரர்கள். மேலும் தேவையில்லாதவற்றை நீக்கி நல்லதை மட்டுமே வைத்துக்கொள்ளும் குணம் உடையவர்கள். பாதுகாப்பாக ஓடுவதற்கு, எந்தத் தடைவந்தாலும் தாண்டி ஓட லாடம் மிக முக்கியமான பாதுகாப்பாக இருப்பது போல, எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதைத் தாண்டி ஓடுவது என்பதை உணர்ந்த நட்சத்திரக்காரர்கள் இவர்கள்.
சுப விசேஷங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் தோரணம். தானும் தன்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பதுதான் விசாகம் நட்சத்திரக்காரர்களின் தனிச்சிறப்பு.
பொதுவாக இவர்கள் பார்ப்பதற்கு பருத்த உடல், இறுக்கமான முகம், அடர்த்தியான புருவம் என பார்க்கவே அச்சமூட்டும் வகையில் இருப்பார்கள். ஆனால் குழந்தை மனமும், மழலைப் பேச்சுமாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் ஆழ்ந்து அறிந்து கொள்பவர்கள் விசாக நட்சத்திரக்காரர்கள். தான் அறிந்ததை மற்றவர்களுக்கும் கற்றுத்தருபவர்கள். எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள். நம்பிவிட்டால் கடைசி வரை கைவிட மாட்டார்கள்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு, எதிரி என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் என்ன... இவர்களுக்கு எதிரி இவர்களேதான். கெட்ட பழக்கங்கள் என்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளாதவரை, இவர்கள் நல்லவர்களே! கெட்ட பழக்கத்தை பழகிவிட்டால் அதன் உச்சத்தை தொடுபவர்களாக இருப்பார்கள். எனவே இவர்கள் மது சூது போன்ற பழக்கங்களை அறவே விடுவது நல்லது.
விசாக நட்சத்திரக்காரர்கள், குடும்ப உறவுகளிடம் கூட அளவோடுதான் நெருக்கம் காட்டுவார்கள், பாசமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையிடம் கூட குறைவாகவே பேசுவார்கள். ஆனால் அவர்களின் தேவைகளை, விருப்பங்களை, ஆசைகளை குறைவறை செய்து தந்து விடுவார்கள். ஆனால் இரவில் இவர்களின் ஒட்டு மொத்த குணமும் மாறிவிடும். ஆமாம்! தாம்பத்திய உறவில் கொஞ்சம் முரட்டுத்தனமும் வேகமும் கொண்டிருப்பார்கள்.
பொதுவாக, இவர்கள் உட்கார்ந்து பார்க்கும் வேலையைத்தான் விரும்புவார்கள். ஓடியாடி உழைப்பது இவர்களுக்குப் பிடிக்காது. தொழில் செய்தால் கூட அதிலும் இதே நிலைதான். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். மொத்த ஏஜென்சி, வட்டித்தொழில், பங்குவர்த்தகம், கூட்டுத்தொழில் (பணம் போடுவதோடு சரி), வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், உபதேச தொழில், நடனம் மற்றும் நாட்டிய ஆசிரியர், திரைத்துறை, ஊடகம், திருமணத் தரகர், மனமகிழ் மன்றம், மதுபான விற்பனை, தர்ம ஸ்தாபனங்கள், ரெடிமேட் கடை, கவரிங் நகைக்கடை, அக்குபஞ்சர் பிசியோதெரபி மருத்துவம் முதலான துறைகளில் இருப்பார்கள்.
விவசாய இடுபொருள் விற்பனை, ரசாயனங்கள் தொடர்பான தொழில், அறிவியல் ஆராய்ச்சி, மருந்து தயாரித்தல், சலவையகம், தூய்மைப் பணி, கட்டிட வேலை, வன்பொருள் விற்பனை(ஹார்டுவேர்ஸ்), பெயிண்ட் விற்பனை, மின்சாதன விற்பனை முதலான பணிகளில் திகழ்வார்கள்.
இன்னும் இருக்கிறது விசாக நட்சத்திரக்காரர்கள் பற்றிய தகவல்கள்.