சுவாதி நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம்.
அந்த நட்சத்திரக்காரர்களின் குணங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
சுவாதி, திருமகள் அவதரித்த நட்சத்திரம். நரசிம்மர் தோன்றிய நட்சத்திரம்.
இந்த சுவாதி குறிப்பிடும் முக்கியமான மற்றொன்று நவரத்தினங்களுள் ஒன்றான முத்து எனும் ரத்தினம்.
இந்த முத்து உருவாவது நாம் அறிந்ததே!
சிப்பிக்குள் விழும் மழைத்துளி முத்தாக மாறுகிறது. அதுமட்டுமல்ல மணல் துகள் கூட முத்தாக மாறும். அதாவது சிப்பிக்குள் விழும் எதுவும் சிப்பியை நெருடச் செய்யும். இந்த நெருடலை சரிசெய்ய சிப்பியானது ஒருவகை திரவத்தைச் சுரந்து நெருடலைக் குறைக்கும். அந்த திரவமும் துகளும் இணைந்து முத்துவாக மாறுகிறது.
ஆம்... சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தம்மை நெருடக்கூடிய தன்னை எதன் காரணம் கொண்டு உதாசீனப்படுத்தினார்களோ அதைக் கொண்டே சாதித்து வெற்றியாளராக வலம் வரக்கூடிய குணம் கொண்டவர்கள்.
சுவாதியில் சூரியன் நீசம் என பார்த்தோம். அதாவது கடும் நெருப்புப் பந்தான சூரியன் சுவாதியில் குளிர்ந்து போகிறார். சுவாதி நட்சத்திரமான முத்துமாலை அணிபவர்களின் உடல் உஷ்ணம் சமநிலை பெறும். அதுமட்டுமல்ல ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும். கடகம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களும், துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் முத்து மாலை அணிவது நல்ல பலனைத் தரும்.
பெண்கள் பவளம் அணிவது இன்றும் தொடர்கிறது. அதிலும் மாங்கல்யத்தில் பவளம் அணிவது சிறப்பானது. பவளம் செவ்வாயின் ரத்தினம். செவ்வாய் என்பது பெண்களின் கணவரைக் குறிக்கும். இந்த பவளத்தோடு முத்துமாலையும் சேர்த்து பெண்கள் அணிந்திருப்பதை பலரும் பார்த்திருக்கலாம்.
இதில் ஒரு ரகசியம் இருக்கிறது.
பவளமும் முத்தும் ஒரு சேர அணிந்த பெண்களின் கணவர்கள் தன் மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் மனைவியின் கண் பார்வைக்கே சப்தநாடியும் ஒடுங்கிப் போவார்கள். பொதுவாக சுவாதியில் பிறந்த ஆண்கள் மனைவியிடம் அடங்கி நடப்பவர்கள். பெண்கள் சுவாதியில் பிறந்தால் ஆண்களை அடக்கி ஆள்வார்கள்.
சுவாதியின் மற்றொரு அடையாளம் தேனீ. தேனீயின் சுறுசுறுப்பு மட்டுமல்ல, தன்னை தொடாதவரைக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கும் தேனி. அப்படித்தான் சுவாதி நட்சத்திரக்காரர்களும்! தீண்டினால் சும்மா விடமாட்டார்கள். பகையை வேருடன் அழிப்பவர்கள். நல்லவர்கள். குணவான்கள். இரக்ககுணம் கொண்டவர்கள். எளிதில் ஏமாறுபவர்கள். நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள். ஆனால், நண்பர்களாலேயே துரோகத்தைச் சந்திப்பவர்கள். அப்படி துரோகம் செய்தவர்களையும் பிறகு மன்னிப்பவர்கள். ஆண்பெண் பாரபட்சமில்லாத நட்பு வட்டம் கொண்டவர்கள். கொஞ்சம் சபல புத்தி உடையவர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்யத் தயங்காதவர்கள்.
சற்று சோம்பல் குணம் உள்ளவர்கள். இவர்களில் பெரும்பாலும் கூட்டுத்தொழில் செய்யவே ஆர்வம் காட்டுவார்கள். அரசு பணிகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். வழக்கறிஞர், நீதிபதி, சட்ட ஆலோசகர், திட்ட அலுவலர், நகர்ப்புற மேலாண்மை, மனிதவள மேலாண்மை, ஆடை ஆபரண தொழில், கலைத்துறை, ஊடகத்துறை, நடிப்பு, பாட்டு, நடனம், கேளிக்கை விடுதி. மதுபான விடுதி. அரசு விரோத தொழில், நிலக்கரி மற்றும் கனிமவளம் தொடர்பு உடைய தொழில், பெட்ரோல் நிலையம். கண்ணாடி தொழில், ஆடம்பர விளக்குகள் விற்பனை, ஓவியம், வண்ணம் பூசும் தொழில். ஆடம்பரப் பொருட்கள் விற்பனை. பெண்கள் அலங்காரப் பொருட்கள் தொழில். செயற்கை கருத்தரித்தல் மையம், ஆண்மை குறைபாடு நிவர்த்தி மருத்துவம், பாலியல் நோய் மருத்துவம் முதலான தொழில்கள் அமையும்.
இவர்கள் வணங்க வேண்டிய இறைவன் - வாயு பகவான் (குருவாயூர்), மற்றும் மருதமலை முருகன்
அதிதேவதை - நரசிம்மர்
விருட்சம் - மருத மரம்
மிருகம் - ஆண் எருமை
பறவை - தேனீ
இவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக பொருந்தும் நட்சத்திரங்கள்-
மிதுனராசி, புனர்பூசம், துலாம், விசாகம், கும்பம், பூரட்டாதி -
மிகச்சிறந்த வாழ்க்கை அமையும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு இருப்பார்கள். 95%
கேட்டை, ரேவதி -
எல்லாவிதமான செல்வ வளத்தோடு, சீரும் சிறப்பான வாழ்க்கை அமையும். 90%
பரணி, பூரம், பூராடம் -
மன நிறைவான வாழ்க்கை அமையும். கவலை என்பது துளியும் இல்லாத வாழ்க்கை அமையும். 85%
பொருந்தாத நட்சத்திரங்கள் அல்லது சேர்க்கவே கூடாத நட்சத்திரங்கள் -
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம் - இவையெல்லாம் சுவாதி நட்சத்திரத்துக்கு ரஜ்ஜு என்னும் மாங்கல்ய பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். எனவே தவிர்க்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் இல்லாத நட்சத்திரங்களை ஜோதிடர் ஆலோசனை பெற்று அறிந்து செயல்படுங்கள்.
இதற்கு முன்பு உள்ள நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்த நட்சத்திரப் பட்டியல் அதிகமிருந்தது. ஆனால் இந்த சுவாதி நட்சத்திரத்திற்க்கு பட்டியல் குறைவாக இருக்கிறதே என கேட்கலாம்? கடலில் மூழ்கி முத்து எடுப்பது என்றால் சும்மாவா? அது எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? சுவாதி என்னும் முத்து கிடைக்க புண்ணியம் செய்தால் மட்டுமே கிடைக்கும். அவ்வளவு மதிப்பு வாய்ந்தது இந்த சுவாதி நட்சத்திரம்.
அடுத்த பதிவில் சுவாதி நட்சத்திரத்துக்கு, யோகம் தரும் நட்சத்திரங்கள், அதிர்ஷ்டம் தரும் நட்சத்திரங்கள், உண்மையான நண்பர்களாக எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அமைவார்கள் என்பதை விளக்கமாகவும், விரிவாகவும் பார்ப்போம்.