No results found

    சாப்பாட்டுப் பிரியர், முக வசீகரக்காரர், மூக்கிற்கு மேல் கோபம், மது அருந்தினால் சிக்கல்! 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 33


    அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கான குணங்கள், தனித்துவங்கள் இன்னும் சொல்கிறேன்.

    ஶ்ரீஎம்மூர் பகவதி ஆலயம் பற்றிய தகவலுக்கு நிறைய வாசகர்கள் நன்றி தெரிவித்து போன் செய்தார்கள். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் மட்டுமின்றி, ஏராளமான வாசகர்கள், ‘இப்படியொரு கோயிலை எங்களுக்குச் சொன்னதற்கு நன்றி’ என்று சொல்லியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

    அஸ்தம் நட்சத்திர இறைவன் -

    சூரியன், காலையில் சூரியனை வணங்குவதும், ஆதித்யஹிருதயம் கேட்பதும் மனவலிமை தரும்.

    அதிதேவதை - காயத்ரி தேவி. காலை நேரத்தில் காயத்ரி மந்திரம் கேட்பது வெற்றிகளைத் தரும்.

    மிருகம் - பெண் எருமை

    பட்சி - பருந்து

    விருட்சம் - வேல மரம்

    மலர் - அல்லி

    இனி அஸ்தம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன்களை பார்ப்போம்.

    அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம்-

    அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள்.. செயல் வீரர்கள். சுறுசுறுப்பின் பிறப்பிடம். எங்கும் வேகம் எதிலும் வேகம் என்றிருப்பார்கள். மலர்ந்த முகம், கண்களில் ஒளி, சராசரிக்கும் மேலான உயரம், மெலிந்த உடல்வாகு, அபார ஞாபக சக்தி இவையனைத்தும் அஸ்தம் 1ம் பாதத்தின் அடையாளங்கள். .

    அதிக அளவுக்கு, அஸ்த நட்சத்திர 1ம் பாதக்காரர்கள், கட்டுமானத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக இன்ஜினியர், கட்டுமான வடிவமைப்பாளர் (ஸ்ட்ரெக்சுரல் என்ஜினியர்), வியக்க வைக்கும் கட்டுமானப் பணி, மருத்துவர், குறிப்பாக பல் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், சீருடைப் பணியாளர், காவலர், அடியாள், கட்ட பஞ்சாயத்து செய்பவர், கந்துவட்டி தொழில், மனிதவள மேம்பாடு, புள்ளியியல் துறை, மனநல ஆலோசகர், விவசாயத் துறை சார்ந்த தொழில், கூட்டுறவு சங்கம், தொழிற்சங்கம், இயந்திர வடிவமைப்பாளர், இயந்திரங்களை இயக்கும் வேலை, வீட்டு உபயோகப் பொருள் விற்பனை, டைல்ஸ் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ் விற்பனை முதலான தொழில் மற்றும் வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.

    உணவுப் பிரியர், தனியே சாப்பிடாமல் சகாக்களோடு பகிர்ந்து சாப்பிடுவார்கள். சூடான உறைப்பான உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    எளிதில் உணர்ச்சி வசப்படுதல், கட்டுப்படுத்த முடியாத கோப உணர்ச்சி, கோபத்தில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என தெரியாமல் இருப்பது... இதுபோன்ற குணங்களால் ரத்த அழுத்தம், பின் தலையில் வலி, ஒவ்வாமை, பித்தம், தலை சுற்றல் பிரச்சினை போன்றவை இருக்கும்.

    அஸ்தம் நட்சத்திர 1-ம் பாதக்காரர்கள், மது அருந்தக் கூடாது, மீறி அருந்தினால் சிறதளவு மது அருந்திய உடனே தன் சுயத்தையே இழப்பார்கள். அதன் பிறகான சம்பவங்களின் காரணமாக நிறைய இழப்புகளைச் சந்திக்க வேண்டியது வரும்.

    இறைவன் - உப்பிலியப்பன் ( ஒப்பில்லா அப்பன்)

    விருட்சம் - வேல மரம், ஆத்தி மரம்

    வண்ணம் - அடர் சிவப்பு

    திசை - தென் கிழக்கு

    அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம்-

    அஸ்தம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள்... கலைகளில் ஆர்வம் உடையவர்கள். கலைத்துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள். நடிப்பு, பாட்டு என எதிலும் அசத்துபவர்கள். எவரையும் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் முக வசீகரம் உடையவர்கள். நேர்த்தியான உடை, எப்போதும் அளவான புன்னகை, எப்போதாவது வெடிச்சிரிப்பு, பேச்சிலேயே வயப்படுத்தும் வல்லமை, குளிர்ச்சியான கண்கள், சராசரி உயரம், மெலிந்த உடல்வாகு என இருப்பார்கள். கற்பனையில் கோட்டை கட்டி வாழ்பவர்கள். அதேசமயம், அந்த கற்பனையை நிஜமாக்கிக் காட்டுவார்கள்.

    இந்த நட்சத்திரத்தின் 2-ம் பாதக்காரர்கள், இயல்பாகவே செல்வவளத்தில் திளைப்பவர்கள். பணத்தட்டுப்பாடு என்ற நிலையே இவர்களுக்கு இருக்காது. அதேசமயம், சேர்த்த செல்வத்தை காப்பாற்றவும் தெரியாது. எளிதில் எவரையும் நம்பிவிடுவார்கள்.

    அளவற்ற நண்பர்களைக் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்வை விரும்புபவர்கள். மதிப்பு வாய்ந்த பொருட்களை மட்டுமே வாங்குபவர்கள். புதுமை விரும்பிகள். முதுமையிலும் அழகு குறையாதவர்கள். முகத்தை வைத்து இவர்களின் வயதைக் கணிப்பது கடினம். அழகைப் பராமரிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வீட்டில் இருந்தாலும் முழு ஒப்பனையோடுதான் இருப்பார்கள்.

    கலைத்துறையில் சாதிப்பவர்களாக இருப்பார்கள். பணம் புழங்கும் தொழில் மற்றும் வேலை,. ஆபரணங்கள் விற்பனை, நவரத்தின வியாபாரம். சிலைகள் செய்தல். ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, பெண்களுக்குத் தேவையான ஆடை ஆபரணங்கள், அழகுப் பொருட்கள் வியாபாரம். பயணங்கள் தொடர்பான தொழில் போன்றவை இவர்களுக்கு அமையும்.

    பாரம்பரிய நடனம், மேல்நாட்டு நடனம் என நடனங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். தன் வீட்டை கலைநயத்தோடு வைத்திருப்பார்கள். சமையலறையைக் கூட கலைநயமாக வைத்திருப்பார்கள். புதுப்புது விஷயங்கள் அனைத்திலும் புகுந்துபுறப்படுவார்கள். தொலைக்காட்சிகளில் கூட உணவு தொடர்பான சேனல்களையே பார்ப்பார்கள். அதில் வரும் உணவுகளைத் தயாரித்தும் பார்ப்பார்கள்.

    உணவு விருப்பம் அதிகமிருக்கும். புதுப்புது உணவுகளை தேடித்தேடி உண்பார்கள். குளிர்ச்சியான உணவுகளில் அலாதி பிரியம் கொண்டவர்கள்.

    சளித்தொல்லை, தலைவலி, சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகள் இருக்கும். மதுப் பழக்கம் கூடவேகூடாது. பழகினால் மீளவே முடியாத அடிமையாகிப்போவார்கள்.

    இறைவன் - ஶ்ரீரங்கநாதர் - ரங்கநாயகி தாயார்

    விருட்சம் - தென்னை மரம்

    வண்ணம் - நீலம்

    திசை - தெற்கு

    அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம் -

    அஸ்தம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் படபடவென பேசிக்கொண்டே இருப்பார்கள். கணீர் குரலுக்கு சொந்தக்காரர்கள், பின்னணிப் பாடகர்கள், மேடை பேச்சாளர்கள், தகவல் தொழில்நுட்ப துறையில் சாதனையாளர்கள். திரைத்துறை, ஊடகத்துறையில் மின்னுபவர்கள், பத்திரிக்கையாளர்கள், தன்னம்பிக்கை கட்டுரைகள் புத்தகங்கள் எழுதுபவர்கள், குழந்தை முகத்தை கொண்டவர்கள், சிறு பிள்ளைத்தனமான செயல்களை செய்பவர்கள். மணிமணியான எழுத்துக்கு சொந்தக்காரர்கள். அச்சு போன்று எழுதுபவர்கள். ஓவிய கலையில் சிறந்தவர்கள்.

    எதிர்காலம் பற்றிய கவலை இல்லாதவர்கள், சேமிப்பு என்பதே இல்லாதவர்கள், அதே சமயம் பணப்பற்றாக்குறை இல்லாதவர்கள். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பவர்கள். அந்த முயற்சிகளில் சாதிப்பவர்கள். நோய் தீர்க்கும் மருந்தை கண்டுபிடிப்பார்கள். சொந்த ஊரை விட்டு வெளியேறி வெளியூர் அல்லது வெளிநாடுகளில் நிரந்தரமாக வாழ்பவர்கள். கல்வியில் சிறந்தவர்கள், கணித திறமையாளர்கள். விஞ்ஞானிகள், பௌதிக்கத்தில் சாதிப்பவர்கள். வங்கிப்பணி, ஆசிரியர்,பத்திர எழுத்தர், பயண கட்டுரையாளர்கள் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

    சுவையான உணவில் விருப்பம் உடையவர்கள். காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்பவர்கள். அதிகபட்சம் சைவ உணவில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    ஒவ்வாமை என்னும் அலர்ஜி பிரச்சினை இருக்கும். கழுத்து, தொண்டைப் பிரச்சினை இருக்கும். டான்சில்ஸ், தொண்டை அடைப்பான், வளைந்த மூக்கு காரணமாக சுவாசப் பிரச்சினை இருக்கும்.

    இறைவன் - குழந்தை கண்ணன், குருவாயூரப்பன்

    விருட்சம் - ஒதியன் மரம்

    வண்ணம் - பச்சை

    திசை - தென் மேற்கு

    அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதம் -

    அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் கலைத்துறையில் சாதித்து வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள்.

    நீண்டகாலமாக கலைத்துறையில் இருந்து சாதிப்பார்கள். அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தவர்கள் என்று பேரெடுப்பார்கள். தன் திறமையால் செல்வம் சேர்ப்பவர்கள். கடல் கடந்து சாதிப்பவர்கள். எழுத்துத் திறமை மிக்கவர்கள். தன் எழுத்தால் அனைவரையும் வசீகரிப்பவர்கள். மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டவர்கள். கேள்வி ஞானம் கொண்டவர்கள். புரியாத புதிருக்கெல்லாம் விடை தெரிந்திருப்பவர்கள். ஆன்மிக ஞானத்தில் உச்சம் பெறுபவர்கள். கதை கவிதையில் வல்லவர்களாக இருப்பார்கள்.

    4-ம் பாதக்காரர்கள், உடையில் ஒழுங்கும் நேர்த்தியுமாக இருப்பார்கள். தன் திறமையின் மேல் சற்று அகந்தை இருக்கும். எதிர் பாலினத்தவரால் கவரப்படுபவர்கள். அளவற்ற நட்பு வட்டம் கொண்டவர்கள். தர்ம காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள்.

    ஆசிரியர், கணிதத் திறமை, ஜோதிடப் புலமை, இசையார்வம் என்று இருப்பார்கள். பயண ஏற்பாட்டாளர், கணிணி வல்லுநர், மென்பொருள் உருவாக்குதல் எனும் தொழிலில் இருப்பார்கள். மேலும் கட்டிடக் கலை வல்லுநர், தபால்துறை, மளிகைக் கடை, உணவகம், தேநீர் கடை, விற்பனை பிரதிநிதி, காய்கறி வியாபாரம், டிபார்ட்மென்ட் ஸ்டோர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

    உணவு விருப்பம் அதிகம் இருக்கும். ஏதாவது மென்று கொண்டே இருப்பார்கள். குளிர்பானம், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள்.

    இவர்களுக்கு சளித்தொல்லை, நுரையீரல் தொற்று, சுவாசக்கோளாறு, நெஞ்சக நோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

    இறைவன் - ஶ்ரீமகாலக்ஷ்மி தாயார், (அலமேலுமங்காபுரம்)

    விருட்சம் - புத்திரசீவி மரம்

    வண்ணம் - இளம் பச்சை

    திசை - வட மேற்கு

    அஸ்த நட்சத்திரக்காரர்களாக நீங்கள் இருந்தால், இது உங்களுக்குப் பயன்பட்டிருக்கும். ஒருவேளை, உங்கள் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில், உறவுகள் என அஸ்த நட்சத்திரக்காரர்கள் இருந்தால், அவர்களுக்கு இந்தத் தொடரை படிக்கக் கொடுங்கள். உங்களால் அவர்களும் பயன்பெறுவார்கள்.

    அடுத்த பதிவில், முத்திரை பதிக்கும் சித்திரை நட்சத்திரம் பற்றி பார்ப்போம்.

    ஆமாம்... சித்திரை நட்சத்திரக்காரர்கள் எதில் முத்திரை பதிப்பார்கள்?

    எல்லாவற்றிலும்தான்!

    Previous Next

    نموذج الاتصال