No results found

    உத்திரம் நட்சத்திரக்காரர்களின் தொழில், வியாபாரம், வேலை, இறைவன்! அவர்களின் கேரக்டர் இப்படித்தான்! 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 30


    உத்திரம் நட்சத்திரத்தின் குணங்களைச் சொல்லி வந்தேன். இந்தப் பதிவில் உத்திரம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன்களை விவரிக்கிறேன்.

    உத்திரம் 1ம் பாதம்-

    உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள்

    நேர்மை, ஒழுக்கம் மிகுந்தவர்கள். உதவி செய்யும் மனப்பான்மை அதிகமிருக்கும். தர்ம காரியங்களுக்கு அதிகம் செலவிடுபவர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்பவர்கள். எந்த உறவையும் உதாசீனம் செய்யமாட்டார்கள். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பவர்கள். வாழ்க்கைத்துணையின் அன்புக்குக் கட்டுப்படுவார்கள். மற்றவர்களால் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ்பவர்கள். இயல்பாகவே பரம்பரைச் சொத்து இவர்களுக்கு இருக்கும். அதேபோல, சொந்த வீடு கண்டிப்பாக இருக்கும் அல்லது நிச்சயம் வாங்குவார்கள்.

    குடும்பத்தொழில் செய்பவர்கள் ( 150 ஆண்டு பழமையான நிறுவனம் முதலான விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்களே... அப்படி பரம்பரைபரம்பரையான தொழில்), எந்தத் துறையாக இருந்தாலும் உயரதிகாரியாக இருப்பார்கள். அரசுப் பணி, காவல்துறை, ஆசிரியர், பேராசிரியர், வழக்கறிஞர், நடுநிலை பத்திரிகை, பாத்திரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, திருமணத் தரகர், அதிக உழைப்பில்லாத வருமானம், அதாவது வட்டித்தொழில், வாடகை வருவாய் என்றிருப்பார்கள்.

    குதிரை பந்தயம், சூதாட்டம், துறைசார்ந்த ஆலோசகர், சொற்பொழிவாளர், அரசியல் பதவி, பெரிய அளவிலான ஒப்பந்தங்களைப் பெற்று அதை, துணை ஒப்பந்த நிறுவனங்களுக்கு கொடுத்து சம்பாதிப்பது (சப் கான்ட்ராக்ட் விடுதல்), அரசாங்க பதவி, அரசியல்வாதிகள் துணையோடு - வாரியத் தலைவர் போன்ற நியமனப் பதவிகள் முதலான பணிகளிலும் தொழிலிலும் இருப்பார்கள்.

    உஷ்ண உலைகள் கொண்ட தொழில், டயர் ரீட்ரேட், அச்சு வார்க்கும் தொழில், தங்க நகை உற்பத்தி, பூஜை பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை, குறிப்பாக ஊதுபத்தி கற்பூரம் தயாரித்தல். மலர்மாலை பூச்செண்டு வியாபாரம், குழந்தைகளுக்கான ஆடை தயாரித்தல் மற்றும் விற்பனை நிலையம், மருத்துவர், குறிப்பாக குழந்தை நல மருத்துவர், மருந்து ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்கள் நடத்துதல், சேவை நிறுவனங்கள் போன்ற தொழில் கொண்டவர்களாக உத்திர நட்சத்திர 1ம் பாதக்காரர்கள் இருப்பார்கள்.

    உத்திரம் 1ம் பாதம் என்பது சிம்மராசியில் இருக்கும். சிம்மம் என்பது நெருப்பு ராசி. உத்திரம் சூரியனின் நட்சத்திரம். எனவே அதிக உஷ்ண உடல்வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் உணர்சிவசப்படுவார்கள். சட்டென கோபம் ஏற்படும். வந்த கோபம் அடங்க அதிக நேரமாகும். சிறிய அளவிலான ஏமாற்றத்தைக் கூட தாங்காதவர்கள். துரோகத்திற்கு ஆட்பட்டால் மனக்கொதிப்பு அடங்காதவர்கள். இதுபோன்ற குணங்களால் ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்றவை மிக எளிதில் வந்துவிடும். இளம் வயதிலேயே வந்துவிடும். மேலும் முதுகெலும்பு தேய்மானம், கழுத்து வலி, பெண்களாக இருந்தால் அடிக்கடி கர்ப்பம் கலைதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

    உத்திரம் 1ம் பாத இறைவன் -

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

    விருட்சம் - அலரி மரம்

    வண்ணம் - சிவப்பு

    திசை - கிழக்கு

    உத்திரம் 2ம் பாதம் -

    உத்திரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், மகா புத்திசாலிகள்.

    எந்த பிரச்சினையையும் மிக எளிதாகக் கையாளும் திறன் வாய்ந்தவர்கள். பணியில் இருந்தாலும் சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். ஓடிஓடி உழைப்பவர்கள், சிக்கனவாதிகள், இலக்கை நிர்ணயித்து பயணிப்பவர்கள், இலக்கை அடையும் வரை ஓயவேமாட்டார்கள்.

    எதிரிகளை எளிதில் வீழ்த்துபவர்கள்.இன்னும் சொல்லப்போனால் எதிரிகளாலேயே ஆதாயம் பெறும் திறன் கொண்டவர்கள். குடும்ப உறவுகளில் அளவோடு பாசம் காட்டுபவர்கள். தன் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து வைத்திருக்கமாட்டார்கள். பணம் பண்ணுவது ஒன்றுமட்டுமே குறிக்கோள் என வாழ்பவர்கள்.

    கணிதத் திறமையாளர்கள், எனவே பட்டயக் கணக்காளர், வங்கிப்பணி, வருமானவரித்துறை, கட்டுமானத் தொழில், கட்டுமானப் பொருள் விற்பனை, மருந்துப் பொருள் தயாரித்தல், அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, மருத்துவப் பேராசிரியர், அறுவை சிகிச்சை நிபுணர், பிணக்கூறு மருத்துவர், மயக்க மருந்து மருத்துவர், மனநல மருத்துவர், வழக்கறிஞர், தோல் பொருட்கள் உற்பத்தியாளர், இரும்பு பெட்டகம் தயாரிப்பவர், பர்னிச்சர் சாமான்கள் தயாரிப்பவர் என்பதான துறைகளில் இருப்பார்கள்.

    வீணாகும் பொருட்களையும் மாற்று உபயோக பொருட்களாக மாற்றும் திறமை உடையவர்கள் இவர்கள். சூரிய மின் உற்பத்தித் தொழிலும் சிறப்பாக இருக்கும். இறைச்சிக்கடை, கால்நடை வளர்ப்பு, இறால் பண்ணை, கோழிப்பண்ணை, பழைய இரும்புக்கடை, உலர் சலவையகம், அமரர் ஊர்தி, ஒளி ஒலி அமைப்பாளர், மேடை நடனம் போன்ற தொழில்களும் உத்திர நட்சத்திர 2ம் பாதக்காரர்களுக்கு அமையும்.

    எந்த உணவாக இருந்தாலும் ஒருபிடி பிடிப்பார்கள். எனவே ஆரோக்கியத்தில் அடிக்கடி உபாதைகள் வரும். மூட்டு தேய்மானம், வளைந்த முதுகு, வளைந்த கால்கள், மலேரியா மற்றும் டைபாயிட் ஜுரம் போன்ற பிரச்சினைகளும் நோய்களும் வரும்.

    வணங்க வேண்டிய இறைவன் - அங்காள ஈஸ்வரி அம்மன்.

    விருட்சம் - வாத நாராயண மரம்

    வண்ணம் - ராமர்பச்சை நிறம்

    திசை - தென்கிழக்கு

    உத்திரம் 3ம் பாதம் -

    உத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் உயரிய சிந்தனை கொண்டவர்கள்.

    மானமே பெரிதென வாழ்பவர்கள். ஆனால் மறைமுகமாக தவறுகளையும் செய்வார்கள். நேர்த்தியான உடை அணிபவர்கள். காலை மாலை இரு வேளையும் உடையை மாற்றும் குணம் கொண்டவர்கள்.

    இவர்களுக்கு குடும்பப் பாசம் அதிகமிருக்கும். வாழ்க்கைத்துணையிடம் மிகவும் கட்டுப்பட்டு, அவர்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பார்கள். கௌரவ பதவிகளில் இருப்பார்கள். அரசியல் பதவிகளும் இருக்கும்.

    உத்திரம் நட்சத்திரத்தின் 3ம் பாதக்காரர்களுக்கு,அரசுப்பணி எளிதாக கிடைக்கும். அரசு தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி அடைவார்கள். அபார ஞாபக சக்தி இருக்கும். தன் திறமையை மட்டுமே நம்புவார்கள். அடுத்தவர் ஆலோசனையை காது கொடுத்துக் கூட கேட்க மாட்டார்கள்.

    இவர்களுக்கு படித்த கர்வம் அதிகமிருக்கும். தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பதில் உறுதியாக இருப்பார்கள். காம்ப்ரமைஸ் என்பதே இவர்களிடம் இருக்காது. இதன் காரணமாகவே அகம்பாவம் பிடித்தவன் என்ற கெட்ட பெயரையும் இவர்கள் சம்பாதிப்பார்கள். எனவே நட்பு வட்டம் குறுகியதாக இருக்கும்.

    எல்லாவிதமான தொழிலும் செய்யும் திறமை உடையவர்கள் இவர்கள். தனக்கு தெரியாதது என்று எதுவும் இல்லை என்பதில் உறுதியாக இருப்பார்கள். உண்மையில் எந்தத் தொழிலிலும் வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள்.

    ஆன்மிகம் தொடர்பான தொழிலிலும் ஒருசிலர் இருப்பார்கள். அசைவம் தொடர்பான தொழிலும் இருக்கும். கௌரவ பதவி, பஞ்சாயத்து செய்தல், வட்டித்தொழில், மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை, இறைச்சி விற்பனை, போதைப்பொருள் விற்பனை, சட்ட விரோத தொழில், பண இரட்டிப்பு, போலி பொருள் தயாரிப்பு, அயல்நாடு தொடர்புடைய தொழில், வேலைக்கு ஆட்களை அனுப்புதல், விளம்பர நிறுவனங்கள் போன்ற தொழில் இவர்களுக்கு அமையும்.

    எந்த உணவையும் எச்சரிக்கையோடும் விழிப்பு உணர்வோடும் சாப்பிடும் குணம் கொண்டவர்கள். சிறிது சந்தேகம் வந்தாலும் உணவை சாப்பிடாமல் புறக்கணித்துவிடுவார்கள். தன் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். இருந்தாலும் வெரிகோஸிஸ் எனும் நரம்பு சுருட்டல் நோய், கால்களில் வித்தியாசம், சொரியாஸிஸ் போன்ற பிரச்சினைகள் இவர்களுக்கு வரும்!

    இறைவன் - காசி விஸ்வநாதர்

    விருட்சம் - எட்டி மரம்

    வண்ணம் - இளம் பச்சை

    திசை - வட மேற்கு

    உத்திரம் 4ம் பாதம் -

    உத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், தன்னலம் கருதாது பிறர் நலன் கருதும் உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள்.

    தான் சம்பாதிப்பதில் குறிப்பிட்ட தொகையை தர்ம காரியங்களுக்கு ஒதுக்குபவர்கள். அதிக விஷய ஞானம் உடையவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த விரும்பாதவர்கள். சுயநலம் இல்லாமல் தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் கற்றுத் தருபவர்கள். கல்விகேள்விகளில் சிறந்து விளங்குபவர்கள். தீராத பிரச்சினைகளுக்கும் விடை வைத்திருப்பவர்கள். குடும்பப் பாசம் அதிகமிருக்கும் இவர்களுக்கு! சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று மீண்டும் தாயகம் திரும்புபவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி பயின்றவர்கள். பல மொழி வித்தகர்கள் என்று பேரும்புகழும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். .

    அரசு பணி, தூதரக பணி, புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பாளர்களாக உத்திரம் நட்சத்திரத்தின் 4ம் பாதக்காரர்கள் இருப்பார்கள். அவற்றில் நல்ல சம்பாத்தியம் எனச் சேர்ப்பார்கள். ஜோதிடம், ஆன்மிகம் போன்ற துறைகளில் ஜொலிப்பவர்கள். மருத்துவத்தில் சாதனை படைப்பார்கள்.

    கலைத்துறையில் ஆர்வம் இருக்கும். நடனம் நாட்டியம் போன்ற கலைகள் கற்றவர்களாக இருப்பார்கள். நடிப்பு, இயக்கம் என திறமைகளை வெளிப்படுத்துபவர்களாகவும் தனிமை விரும்பிகளாகவும் இருப்பார்கள்.

    மேலும் இவர்கள், மெய்ப்பொருள் உணருபவர்கள். பயணங்களில் ஆர்வம் உடையவர்கள். பயணத் திட்டங்களை வகுக்கும் திறமையாளர்கள். டிராவல்ஸ் டிரான்ஸ்போர்ட் நடத்துவார்கள். அயல்நாடு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், வாசனை திரவியத்தொழில், டூர் ஏஜென்ட், மருத்துவம் தொடர்பான தொழில், சித்த மருத்துவம் போன்ற தொழில் என்பதைச் செய்பவர்களாக இருப்பார்கள்.

    உணவுகளில் சுகாதாரமான உணவு மட்டுமே உண்பார்கள். இடுப்பு மற்றும் பிட்டங்களில் பிரச்சினைகள் இருக்கும்.

    இறைவன் - பள்ளிகொண்ட பெருமாள்

    விருட்சம் - புங்கன் மரம்

    வண்ணம் - நீலம்

    திசை - வடக்கு

    உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாதனையாளர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவர்கள், சாதனைகளை செய்ய வாலிப வயதில் இருக்கும் ஆண்- பெண்களுக்கு உடை, கல்வி உதவி போன்றவை செய்து வந்தால், இன்னும் இன்னும் சிறப்பான பலன்களை உத்திர நட்சத்திரக்காரர்கள் பெறுவார்கள் என்பது உறுதி.

    அடுத்த பதிவில்... அஸ்தம் என்னும் நட்சத்திரத்தையும் நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களையும் பார்ப்போம். அஸ்தம் நட்சத்திரம்... ஆபத்பாந்த நட்சத்திரம். இந்த அஸ்தம் நட்சத்திரத்தில்தான் உலகின் ஒளிக்கடவுளான சூரியன் பிறந்தார் என்பது தெரியும்தானே உங்களுக்கு!

    Previous Next

    نموذج الاتصال