மிருகசீரிட நட்சத்திரத்தைப் பற்றிய தகவல்களை, அந்த நட்சத்திரக்காரர்களின் குணங்களைப் பார்த்து வருகிறோம்.
இன்னும் பார்ப்போமா?
மிருகசீரிடம்.... இதன் பொருள் என்ன? ம்ருகசீர்சம் இதுதான் மூலப்பெயர். இதன் விளக்கம்..... மானின் மிரட்சியான கண்கள் என்று அர்த்தம்.
சரி... மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்?
பொதுவாகவே இவர்கள் மனதளவில் பயந்தவர்கள், இவர்களை ஏதாவதொரு பயம் ஆட்கொண்டே இருக்கும். தன்னைப்பற்றிய பயம், எதிர்காலம் குறித்த பயம், தன் குடும்பத்தைப் பற்றிய பயம், நோய் பயம், தன் வேலையில் பயம், தொழிலில் பயம் என நீண்டுகொண்டே போகும்.
ஒரு பயம் தெளிந்தவுடன் அடுத்த பயம் ஒட்டிக்கொள்ளும். இதனால் இவர்கள் பலவீனமானவர்களா என்றால் நிச்சயமாக இல்லை. இது ஒருவகையான எச்சரிக்கை உணர்வு அவ்வளவுதான்.
இந்த பயம் அனைத்தையும் எப்படி சரிசெய்வது? அந்த பிரச்சினை தம்மை அணுகாமல் காத்துக்கொள்வது எப்படி.... என இவை அனைத்திற்கும் அவர்களே தீர்வு கண்டு கொள்வார்கள் என்பதுதான் சுவாரஸ்யம்.
அடுத்தவர் பிரச்சினைகளுக்கு தெளிவாக தீர்வு சொல்லும் இவர்கள் தனக்கொரு பிரச்சினை என்றால் மிகவும் குழம்பி, அந்தப் பிரச்சினையோடு பயணித்து அதன் பிறகே தீர்வைக் காண்பார்கள்.
குடும்ப உறவுகளோடும், சகோதர உறவுகளிடமும் அதிக பாசம் வைப்பவர்கள் இவர்கள். அவர்களுக்கெல்லாம் ஏதேனும் பிரச்சினை என்றால் கேட்காமலேயே ஓடிப்போய் உதவுவார்கள். ஆனால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பிரச்சினை என்றால் இவர்களில் எவரும் உதவிக்கு வரமாட்டார்கள். இவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.
கல்வியறிவை விட அனுபவ அறிவே அதிகமுடையவர்கள் இவர்கள். எனவே இவர்களில் பெரும்பாலோர் அலுவலக வேலைக்குச் செல்வதைவிட, சொந்தத் தொழில், சேவை சார்ந்த வேலைகள் ( நகை வடிவமைப்பு, மர வேலைகள், கட்டிடத்தொழில் சம்பந்தமான வேலைகள், மின்சார பணி, மேடைஅலங்காரம், பிரிண்டிங் தொழில், ஆடை வடிவமைப்பாளர், உள் அலங்கார வேலை (இண்டீரியர் டெகரேட்டர்), புத்தக வடிவமைப்பு, நகர்ப்புற வடிவமைப்பு) போன்ற தொழில் தொடர்பான பணிகளில் இருப்பார்கள்.
வாசிப்பு பழக்கம் அதிகமுடையவர்கள். நல்லது கெட்டது எது ? என பார்த்தமாத்திரத்திலேயே கண்டுபிடிக்கும் உள்ளுணர்வு அதிகம் உடையவர்கள்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு இறைபக்தி அதிகம் இருக்கும். இருந்தாலும் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் மீதான பக்தியும் தொடர்பும் இருக்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகம் மேற்கொள்வார்கள்.
இளமைக் காலத்தில் களவும் கற்று மற என்பது போல் எல்லாவிதமான பழக்க வழக்கங்களையும் கற்று, சட்டென அனைத்தையும் விட்டுவிடுவார்கள்.
சிவனின் நெற்றிக்கண் போன்ற வடிவம் மிருகசிரிடம். எனவே இயல்பாகவே இவர்களுக்கு தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முன்பே அறிந்திருப்பார்கள். எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதையும் உணர்ந்தே வைத்திருப்பார்கள். அதை எப்படிச் சமாளிப்பது என்பதையும் திட்டமிட்டுக்கொள்வார்கள். இவர்களின் பலமே இந்த உள்ளுணர்வுதான்!
எவரையும் காயப்படுத்தும்படி பேசமாட்டார்கள். கோபம் எளிதில் வராது. வந்தால் எதிரிகள் தாங்க முடியாத அளவிற்கு இவர்களின் கோபம் வெளிப்படும்.
நேர்மை தவறாதவர்கள் இவர்கள். எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, எந்தவிதமான தப்பான காரியங்களையும் செய்ய மிகமிக அஞ்சுவார்கள்.
ஆரோக்கியத்தில் பிரச்சினை என பார்த்தால், டயாபடிக் எனும் சர்க்கரை நோய் பாதிப்பு வரும். அதை தவிர செரிமானக் கோளாறுகள், பாலின அவஸ்தைகள், சிறுநீரகக் கல்லில் பிரச்சினைகள் வரும்.
மிருகசீரிடம் குறித்த இன்னும் சில முக்கியமான தகவல்கள் :
தேவதை - சந்திரன்
அதிதேவதை - சிவபெருமான்
சிவாலய வழிபாடு செய்வதும், ஶ்ரீநடராஜரை அடிக்கடி தரசிப்பதும் பெரும் நன்மைகளைத் தரும்.
மிருகம் - பெண் - சாரைப் பாம்பு. எனவே புற்றுள்ள ஆலயங்களுக்குச் சென்று வருவதும், பாம்பாட்டி சித்தரை வழிடுவதும் மிக மிக அவசியம்.
பறவை - கோழி (அசைவ உணவில் கோழி இறைச்சியை தவிர்க்க வேண்டும்)
விருட்சம் - கருங்காலி மரம். முடிகின்ற இடத்தில் இந்த மரத்தை நட்டு வளர்த்து வாருங்கள்.
மலர்- செண்பகம்
தானியம்- துவரை
இவர்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய நட்சத்திரங்கள், மற்றும் நட்சத்திரக்காரர்கள் -
திருவாதிரை, சுவாதி, சதயம் -
இந்த நட்சத்திரம் மிகுந்த நன்மைகளையும், இந்த நட்சத்திர நாட்களில் எடுக்கின்ற முயற்சிகளும் 100 சதவீதம் வெற்றியைத் தரும். பண வரவும் தாராளமாக இருக்கும்.திருமணம் நடத்துவது மிகவும் சிறப்பாகும்.
பூசம்- அனுஷம்- உத்திரட்டாதி
இந்த நட்சத்திர நாட்கள் மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களால், சொத்து சேர்க்கை, உயர் பதவிகள் கிடைப்பது, உரிய உதவி உரிய நேரத்தில் கிடைப்பது, அவசரத் தேவைகள் பூர்த்தியாவது போன்றவை நடக்கும்.
அசுவினி-மகம்- மூலம்-
இந்த நட்சத்திர நாட்களும், இந்த நட்சத்திரக்காரர்களும் மிகுந்த அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு உதவுவார்கள். கடன் கிடைப்பது, கடன் அடைப்பது, தொழில் தொடர்பான நன்மைகள் நடப்பது, உத்தியோகத்திற்காக மனு செய்வது, பணியில் சேர்வது, வங்கிக்கடன் வாங்குவது போன்றவை செய்ய சிறப்பாக இருக்கும்.
கார்த்திகை- உத்திரம்- உத்திராடம்
இந்த நட்சத்திர நாட்கள் நன்மைகள் நடக்கும் நாட்களாகும். வெளிநாடு செல்வது, பயணங்கள் மேற்கொள்வது, வியாபாரப் பேச்சுக்கள், சுப காரிய பேச்சுவார்த்தைகள், சுப ஒப்பந்தங்கள். செய்ய ஏற்றதாகும்.
ரோகிணி- அஸ்தம்- திருவோணம்
இந்த நட்சத்திர நாட்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள், தேடிவந்து உதவிகள் செய்வதும், அதிக நன்மைகளும் நடக்கும். வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டில் வேலை தேடுவது, பயணங்கள் செய்வது, என பலவித நன்மைகள் நடக்கும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.இந்த நட்சத்திரக்காரர்களால் தாங்க முடியாத அவமானங்கள், அவஸ்தைகள் நிகழும். வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது. வாழ்க்கையே விரக்தியாகிவிடும்.
ஆயில்யம்- கேட்டை- ரேவதி
உங்கள் ஆயுள் முழுவதும் நீங்கள்தான் உதவிக்கொண்டே இருக்கவேண்டும். இவர்களால் ஒரு நன்மையும் உங்களுக்குக் கிடைக்காது.
பரணி - பூரம்- பூராடம்
இந்த நட்சத்திரகாரர்களால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகளை மிருகசீரிடக்காரர்கள் சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவர்களை விட்டு விலகி இருப்பது மட்டுமே பரிகாரம் ஆகும். வாழ்க்கைத்துணையாக இந்த நட்சத்திரக்காரர்களை நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்.
சித்திரை- அவிட்டம்
இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் நண்பராகவோ, வாழ்க்கைத்துணையாகவோ இருக்கக்கூடாது. தினம் தினம் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும்.
அடுத்த பதிவில் மிருகசீரிட நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன்களை இன்னும் பார்ப்போம்!