பலன்: எல்லாவிதமான அச்சங்களும் அகலும்
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பை குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே
பொருள்:
பொன்னால் ஆன மலையினை வில்லாக ஏந்தி, சிவ பெருமான், தானவர்களை (அசுரர்கள்), அவர்கள் இருப்பிடமான திரிபுரத்தில் சென்று போரிட்டு அழித்தார். மதம் கொண்ட யானையின் கண்கள் சிவந்து காணப்படும். அப்படிப்பட்ட சிவந்த கண்களுடைய யானையின் தோலினை (கரி உரி - யானைத் தோல்) போர்த்திக்கொண்டு காவல் புரியும் சிறந்த காவலன், சிவபெருமான்.
[செஞ்சேவகன் = செம்மை + சேவகன் (சிறந்த = செம்மை)]
அந்த காவலனின் உடலில் ஒரு பகுதியை (இடபாகத்தை) தனக்கென்று வைத்துக்கொண்ட நாயகி அன்னை அபிராமி. அவளின் பொன்போன்ற சிவந்த கைகளில் (கோ கனகச் செங்கை) உள்ள கரும்பு வில்லும், ஐந்து மலர் அம்புகளும் (கரும்பும் மலரும்) எப்போதும் நம் சிந்தனையில் நிலைத்திருக்கட்டும்.
சிவபெருமான், புலித்தோலினை உடையாக உடுத்திருப்பது நமக்கு தெரிந்த ஒன்று. யானைத்தோல், மான்தோல் கூட உடுத்திருப்பார்.
புலி - காம விகாரங்களை குறிக்கும்.
யானை - பெருமையினால் ஏற்பட்ட கர்வத்தை குறிக்கும்.
மான் - கட்டுப்பாடின்றி திரியும் மனதினைக் குறிக்கும்.
இவ்வாறு யானைத்தோல் உடுத்திருப்பதால், கர்வத்தை அடக்கி தன்வயம் வைத்திருப்பவர் என்று பொருள்படும்.
பாடல் (ராகம் - கர்நாடக தேவகாந்தாரி, தாளம் - ஆதி) கேட்க