இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.
பரோலில் உள்ள நளினிக்கு விடுதலை தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தது. பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி விடுதலை ஆனார். 31 ஆண்டுகள் கழித்து என் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினியின் தாயார் பத்மா தெரிவித்தார். நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.